Saturday 21 March 2015

அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்:ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் (திருவரங்குளநாதர்)
 உற்சவர்:-
 அம்மன்/தாயார்:பிரஹன்நாயகி (பெரியநாயகி)
 தல விருட்சம்:மகிழமரம்
 தீர்த்தம்:ஹர தீர்த்தம்
 ஆகமம்/பூஜை:காரண ஆகமம்
 பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
 புராண பெயர்:நிம்பாரண்ய சேத்திரம்
 ஊர்:திருவரங்குளம்
 மாவட்டம்:புதுக்கோட்டை
 மாநிலம்:தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
   
 - 
   
 திருவிழா:
   
 ஆடிப்பூரம் அம்மன் திருக்கல்யாணம், மகா சிவராத்திரி, திருவாதிரை, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம். 
   
 தல சிறப்பு:
   
 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. 
   
திறக்கும் நேரம்:
   
 காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
 அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் திருவரங்குளம்-622 303 புதுக்கோட்டை மாவட்டம். 
   
போன்:
   
 +91 98651 56430,90478 19574,99652 11768 
   
 பொது தகவல்:
   
 பூரம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: ஒழுக்கமும், தைரியமும் இவர்களிடம் மேலோங்கி இருக்கும். புத்திக்கூர்மையோடு எதையும் அணுகுவர். வியாபாரத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். விவசாயப் பணிகளில் நாட்டம் கொள்வர். உண்மை, நீதி உடையவர்களாக இருப் பர். மக்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர். சிவனது மூலஸ்தானத்திற்கு பின் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரின் தனி சன்னதி உள்ளது. பிரகாரத்தில் பொற்பனை விநாயகர், அரங்குள விநாயகர், வீணாதர தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நந்தி, சதுர்த்தி விநாயகர், சப்த மாதர்கள், 63 நாயன்மார்கள், ஐயனார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சரஸ்வதி, மகாலட்சுமி, ஜேஷ்டா தேவி, பாலமுருகன், நவகிரகம், பைரவர், சூரியன், சந்திரன், நடராஜர், நால்வர் சன்னதிகள் உள்ளன. 
   
 
பிரார்த்தனை
   
 பூரம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், கிரக தோஷம், நாகதோஷம், மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அம்மனிடம் உள்ள ஸ்ரீசக்கரத்தை நினைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும்.
 
   
நேர்த்திக்கடன்:
   
 சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். 
   
 தலபெருமை:
   
 இக்கோயிலைச்சுற்றி சுமார் 150 கி.மீ. சுற்றளவில் உள்ள பெரும்பாலான மக்கள் இத்தல இறைவனை குலதெய்வமாக வழிபாடு செய்கின்றனர். அம்மன் பெரியநாயகி நான்கு திருக்கரத்துடன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள். இப்பகுதியில் வாழ்ந்த கட்டுடையான் செட்டியார் வம்சத்தில் இத்தல அம்மன் பெண்குழந்தையாக பிறந்து வளர்ந்ததாக கூறப்படுகிறது. எனவே இப்போதும் கூட இந்த வம்சத்து பெண்கள் இக்கோயிலுக்கு வந்தால், தங்கள் வம்ச பெண்ணின் மாப்பிள்ளையாக சிவனை நினைத்து முக்காடு போட்டு வழிபாடு செய்யும் பழக்கம் உள்ளது.

சிறப்பம்சம்: பூர தீர்த்தம் என்பது அக்னிலோகத்தில் உள்ள ஒரு புனித தீர்த்தமாகும். பூர நட்சத்திர லோகத்தில் சிவ தீர்த்தம், நாக தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஸ்ரீதீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம், குரு தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தங்கள் உண்டு. இந்த ஏழு தீர்த்தங்களும் இத்தலத்தில் இருப்பதால் இது பூரம் நட்சத்திரத்திற்குரிய கோயிலானது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிறந்தநாள், மாதாந்திர நட்சத்திர நாள், திருமணநாள், ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் இங்கு வழிபடலாம். அடிக்கடி சென்று வழிபாடு செய்ய வேண்டிய முக்கியதலம்.
 
   
  தல வரலாறு:
   
 சோழமன்னன் கல்மாஷபாதனுக்கு நீண்ட காலமாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. சிவபக்தனான இவன், தனக்கு பின் சிவ சேவை செய்ய ஆளில்லை என்பதை நினைத்து வருந்தி, அகத்திய முனிவரிடம் முறையிட்டான். மன்னனின் குறை நீங்க, திருவரங்குளம் சென்று அங்கிருக்கும் சிவலிங்கத்தை வணங்கும்படி அவர் கூறினார். மன்னனும் இத்தலம் வந்து சிவலிங்கத்தை தேடி அலைந்தான். அப்பகுதியில் தான் இருக்கும் இடத்தை அரசனுக்கு உணர்த்த, சிவபெருமான் திருவுளம் கொண்டார். அப்போது அப்பகுதியில் பசு மேய்க்கும் இடையர்கள் மூலம் ஒரு தகவல் அறிந்தான். அப்பகுதி வழியாக யாராவது பூஜைப் பொருள்களைக் கொண்டு வந்தால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் தவறி விழுவதாக அவர்கள் கூறினர். இதையடுத்து மன்னன் அங்கு சென்று பூமியில் தோண்டிப்பார்த்தான். அப்போது பூமியிலிருந்து ரத்தம் பீய்ச்சியடித்தது. அவ்விடத்தில் ஒரு லிங்கம் தென் பட்டது. சிவனின் தலையில் கீறிவிட்டோமோ என வருத்தப்பட்ட மன்னன், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றான். இறைவன் மன்னனை தடுத்தாட்கொண்டு பார்வதியுடன் திருமணக் கோலத்தில் தரிசனம் கொடுத்து, அந்த இடத்தில் எழுந்த கோயிலே இது. ஒரு பூர நட்சத்திர நாளில் தான் இந்த நிகழ்ச்சி நடந்தது. இறைவனின் அருளால் மன்னன் கோயில் கட்டினான்.அவனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

கோயில் வெளிப்பிரகாரத்தில் பொற்பனை மரம் இருந்துள்ளது. இதிலிருந்து கிடைக்கும் பொன் பழங்கள் மூலம் பணம் பெற்று இந்த கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த இடத்தில் அதன் அடையாளமாக கல்ஸ்தூபி உள்ளது. 12ம்நூற்றாண்டிற்கும் முன்னால் சோழர்கள், பாண்டியர்களின் திருப்பணியில் உருவான கோயில் இது. இத்தல தீர்த்தம் சிவனது தலையில் இருந்து உருவானதால் ஹர தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இதனால் தான் இத்தலம் திருவரங்குளம் ஆனது.
 
   
சிறப்பம்சம்:
   
 அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.  
   
 

அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்:மகாலிங்கேஸ்வரர்
 உற்சவர்:-
 அம்மன்/தாயார்:மரகதவல்லி, மாணிக்கவல்லி
 தல விருட்சம்:-
 தீர்த்தம்:-
 ஆகமம்/பூஜை:
 பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
 புராண பெயர்:
 ஊர்:விராலிப்பட்டி, தவசி மேடை
 மாவட்டம்:திண்டுக்கல்
 மாநிலம்:தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
   
 - 
   
 திருவிழா:
   
 இத்தலத்தில் மாசி மக திருவிழா விசேஷமாக நடக்கும். 
   
 தல சிறப்பு:
   
 சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு. மகம் நட்சத்திரத்திற்குரிய சிறப்பான ஆலயம் இது. மக நட்சத்திரம் தவிர மற்ற 26 நட்சத்திரக்காரர்களும் வணங்கி வழிபட்டு சகல சவுபாக்கியங்களையும் பெறக்கூடிய சிறப்பு பெற்றது. பொதுவாக, ஒரு சன்னதிக்குள் ஒரு அம்பிகைதான் இருப்பாள். ஆனால், இங்கு ஒரே சன்னதிக்குள் மாணிக்கவள்ளி, மரகதவள்ளி என்ற இரண்டு அம்பிகைகள் இச்சா சக்தியாகவும், கிரியா சக்தியாகவும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சிவலிங்கம் வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பரத்வாஜ மகரிஷியால் பூஜிக்கப்பட்டது. பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் வழிபட வேண்டிய தலம் இது. அகத்தியர் முதல் பல ஆயிரம் சித்தர்கள், மகரிஷிகள், மற்றும் முனிவர்களும் தவமியற்றி வழிபட்ட லிங்கம். ராமர் தன் பரிவாரங்களுடன் பரத்வாஜ மகரிஷியை தரிசித்து விருந்துண்ட தலம். இங்குள்ள பைரவர் ஈசனுக்கு நேர் எதிரே ஆதிபைரவராக அருள்பாலிக்கும் சிறப்புப் பெற்ற ஒரே ஸ்தலம். 
   
திறக்கும் நேரம்:
   
 காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
 அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி, ஒடுக்கம் தவசி மேடை- 624 304 சாணார்பட்டி வழி, நத்தம் வழி, திண்டுக்கல் மாவட்டம். 
   
போன்:
   
 +91 95782 11659 
   
 பொது தகவல்:
   
 மகம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட இவர்கள், கல்வி பயில்வதில் ஆர்வம் கொண்டிருப்பர். தருமம் செய்வதில் வல்லவர்கள். மனத்தூய்மை, நேர்மை மிக்கவர்கள். பிறரை கவுரவமாக நடத்துவர். மதுரமான மொழி பேசுவதோடு பேச்சு சாதுர்யமும் பெற்றிருப்பர். பெரும்பாலும் தலைமைப்பதவியில் தான் இருப்பர்.

கோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம், தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த நிலையில் இங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
 
   
 
பிரார்த்தனை
   
 மகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். மாசி மகத்தன்று சிவன், அம்பாளுக்கு விசேஷ பூஜை நடக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்நாளில் வேண்டிக் கொள்வது விசேஷம். நோய் நிவர்த்தி பெற, சிவன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். வீடுகளில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் அந்தக் குறை நீங்கவும் சிறப்பு பூஜை செய்கிறார்கள்.
 
   
நேர்த்திக்கடன்:
   
 சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
   
 தலபெருமை:
   
 மகம் நட்சத்திர கோயில்: பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தில் இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

இரண்டு அம்பிகையர்: அளவில் சிறிய இக்கோயிலில், மகாலிங்கேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு வலது பக்கத்தில் உள்ள சன்னதியில் மரகதவல்லி, மாணிக்கவல்லி என்ற இரண்டு அம்பிகையர் காட்சி தருகின்றனர். மதுரையில் அருளும் மீனாட்சியம்மனின் பெயரால் இவர்களுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. கிழக்கு நோக்கிய இந்த சன்னதிக்குள், அம்பாள்கள் இருவரும் தெற்கு நோக்கி மதில் ஓரத்தில் உள்ளனர். சன்னதிக்குள் எட்டிப்பார்த்துதான் இவர்களைத் தரிசிக்க முடியும். இத்தகைய அமைப்பிலான சன்னதியைக் காண்பது அரிது. இச்சா சக்தி, கிரியா சக்தியாக அருள்பாலிக்கும் இந்த அம்பிகையரை வழிபட்டால், ஞான சக்தியான இறைவனை எளிதாக அடையலாம் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாறு அமைத்துள்ளனர். பரத்வாஜர் ஒரு தவமேடையில், யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு, ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் எப்போதும் யோகிகளும், தபஸ்விகளும் சிவனை அரூபமாக பூஜை செய்து வருகின்றனர். பெண்களால் இவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் தான், அம்மன் வெளியே தெரியாமல் சுவரை ஒட்டி அருள்பாலிப்பதாக தல வரலாறு கூறுகிறது.

ஆதி பைரவர்: சிவாலயங்களில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் காட்சி தரும் பைரவர், இங்கு சிவனுக்கு எதிரில் காட்சியளிக்கிறார். இங்கு அருளும் மகாலிங்கேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால், இவரது உக்ரம் பக்தர்களைத் தாக்காமல் இருக்க எதிரில் பைரவரை பிரதிஷ்டை செய்துள்ளனர். இவரை ஆதி பைரவர் என்கின்றனர். பைரவருக்குப் பின்புறம் தலைக்கு மேலே சிறிய துளை ஒன்றுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த துளை வழியாக, சிவனை தரிசித்து விட்டு, பின்பு பைரவரை வணங்கி, அதன்பின்பு கோயிலுக்குள் செல்கிறார்கள். சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு.
 
   
  தல வரலாறு:
   
 சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய ராமர், பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கி அவரது உபசரிப்பை ஏற்றார். அவர்களுடன் ஆஞ்சநேயரும் வந்திருந்தார். தனக்கு உதவியஆஞ்சநேயரை கவுரவிக்கும் விதமாக, தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கத்திலிருந்த உணவை அவரை உண்ணும்படி கூறினார். (இந்நிகழ்விற்குப் பிறகுதான் வாழை இலையின் நடுவில் கோடு வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்று கூறுகிறது) இத்தகு சிறப்பு மிக்க பரத்வாஜர், இத்தலத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. மதுரை மீனாட்சியை பிரதிஷ்டை செய்த ஐந்து முனிவர்களில் இவரும் ஒருவர்.

சிறப்பம்சம்: பரத்வாஜர் இந்தக்கோயிலுக்கு வந்து, ஒரு தவமேடை அமைத்தார். அதில் அமர்ந்து யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு, ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் ஏற்பட்டது. கோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம் தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த பீடங்களின் வடிவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் பல ரிஷிகளும், மகான்களும் அரூப வடிவில் கலந்து கொள்வதாக ஐதீகம். மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம் என்பது பழமொழி. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரதாவாஜரை குருவாகக் கொண்டு மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாத சிவராத்திரி நாட்களில் இத்தல இறைவனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் வாழ்வில் நல்ல நிலையை அடைவார்கள் என்பது நம்பிக்கை.
 
   
சிறப்பம்சம்:
   
 விஞ்ஞானம் அடிப்படையில்: சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு. பொதுவாக, ஒரு சன்னதிக்குள் ஒரு அம்பிகைதான் இருப்பாள். ஆனால், திண்டுக்கல் அருகிலுள்ள ஒடுக்கம் தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயிலில், ஒரே சன்னதிக்குள் இரண்டு அம்பிகையரை தரிசிக்கலாம்.