Tuesday 5 July 2016

கண் தோஷத்தை போக்கும் திருவெள்ளியங்குடி!


கும்பகோணத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருவெள்ளியங்குடி. வைணவ தலமான இந்த ஆலயத்தை, அசுர சிற்பி மயன் அமைத்ததாகச் சொல்கிறார்கள். திருமால் தமது வாமன அவதாரத்தில், மகாபலியிடம் 3 அடி தானம் கேட்டார் அல்லவா? அப்போது மகாபலியின் குருவான சுக்கிரர், தானம் கேட்பது திருமால் என்பதையும் அவரது நோக்கம் என்ன என்பதையும் அறிந்து கொண்டார். எனவே, தானம் கொடுக்க வேண்டாம் என்று மகாபலியை எச்சரித்தார். ஆனால், மகாபலி அவர் பேச்சைக் கேட்கவில்லை. நீர் வார்த்து தானம் செய்ய முற்பட்டார். உடனே, சுக்கிராச்சாரியார் வண்டாக உருவம் கொண்டு பலியின் கமண்டலத்துக்குள் புகுந்து நீர் வரும் பாதையை அடைத்துக் கொண்டார். வாமனன் சும்மா விடுவாரா? ஒரு தர்ப்பையை எடுத்து கமண்டலத்தின் நீர் வரும் பாதையைக் குத்தினார்; சுக்கிரருக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோனது. அந்தக் கண்ணில் பார்வை திரும்ப, திருமாலையே வேண்டித் தொழுதார் சுக்கிரன். பிறகு, சுவாமியின் கட்டளைப்படி அவர் வழிபட்டு கண்பார்வை பெற்ற திருத்தலம்தான் திருவெள்ளியங்குடி. சுக்கிரன் வெள்ளி எனவும் அழைக்கப்படுவதால், இந்தத் தலத்துக்கு இப்படியொரு திருப்பெயர் வந்தது. இந்தக் கோயிலின் கருவறையில், சுக்கிர பகவானுக்கு கொடுக்கப்பட்ட ஒளி, அணையா நேத்ர தீபமாக இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. பிரம்மா, இந்திரன், பூதேவி, சுக்கிரன், மயன், மார்க்கண்டேயர் ஆகியோருக்கு திருமால் இந்தத் திருத்தலத்தில் திருமணக் கோலத்தில் காட்சி தந்தருளினார். எனவே, திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட, இனிய இல்வாழ்க்கை கிடைக்கும் என்கிறார்கள். சுக்கிர தோஷம், பார்வை குறைபாடு நீக்கும் தலமாகவும் இத்தலம் திகழ்கிறது

No comments:

Post a Comment